சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் நல்லார்க்கினியன்’ மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவில் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேச்சு

ராமேஸ்வரி ராஜா

தஞ்சோங் மாலிம், ஜூலை. 30 :

பக்தி இலக்கியம் அல்லாமல் தமிழ்மொழி செம்மொழி தகுதியோடு இன்று நிலைத்திருக்க முடியாது. ஆக தமிழ்க்கல்வியோடு பக்தி இலக்கியத்தையும் சேர்த்து மாணவர்கள் கற்க வேண்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேசினார்.

இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் நல்லார்க்கினியன்’ மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவில் ம.இ.காவின் தேசியத் துணைதலைவருமாகிய அவர் சிறப்புரையாற்றினார்.
கவிதை என்பது சொல், பொருள் பதிந்து வாசகரின் மனதில் உணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறந்த எழுத்துகளால் சமுதாயத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். சிறந்த படைப்பாளர்கள், காலம் முழுதும் மக்கள் மனதில் வள்ளுவனும், பாரதியும் போல நிலைத்திருக்க முடியும் என மாணவர்களிடத்தில் அவர் வலியுறுத்தி கூறினார்.
மேலும், இடைநிலைப்பள்ளிகளில் தமிழை இன்னும் அதிகமான மாணவர்கள் கற்க வேண்டும். அண்மையில் பிரதமரின் அறிவிப்பு அதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் எனவும் சரவணன் தெரிவித்தார்.

சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபுக் கவிதைப் போட்டி மூன்றாம் முறையாக நடத்தப்பட்டது. மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு போட்டி நடத்தப்படுகிறது. நாட்டில் தமிழ்மொழி செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் புனைப்பெயரான நல்லார்க்கினியன் பெயரில், பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை அவர்களின் பெரும் முயற்சியில் இப்போட்டி நடத்தப்படுகிறது என ஏற்பாட்டுக்குழுத் தலைவர் வனிஷா இலட்சுமணன் தமதுரையின்போது குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப்புரிந்த டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் விழாவை தொடர்ந்து நடத்துவதற்கு 1 லட்சம் ரிங்கிட் நன்கொடை வழங்கினார். மேலும், பல்கலைக்கழகதின் 40 பேர்கொண்ட தமிழ்ப் பகுதி மாணவர்கள் மரபிலக்கிய கல்விப்பயணமாக நாளை தமிழ்நாடு செல்லவிருப்பதையொட்டி ஊக்குவிப்பு தொகையாக 10,000 ரிங்கிட் வழங்கியிருப்பதும் எங்களின் தமிழ் கல்விக்கு பெரும்துணையாக இருக்கிறது. இவ்வேளையில் அவருக்கு நன்றி தெரிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இவ்விழாவில் நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பும், மூத்த மரபு கவிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் அங்கமும் இடம்பெற்றது. கவிஞர் அசன் கனி, கவிஞர் சோலை முருகன், பாவலர் ஐ. இளவழகு, கவிஞர் கவிக்கூத்தன், கவிஞர் பாவை ஆகிய மூத்த மரபு கவிஞர்களுக்குச் சிறப்பு செய்து நல்லார்க்கினியன் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
மரபுக் கவிதைப் போட்டி மூன்று பிரிவாக நடத்தப்பட்டது. அதில் மாணவர் பிரிவு முதல் நிலை வெற்றியாளராக நவீன் கணேசனும், இளையோர் பிரிவில் குமார் துரைராஜுவும், பொதுப் பிரிவில் கவிஞர் தனசேகரன் கோராகியும் வாகை சூடினர். இவர்களுடன் மூன்று பிரிவிலும் 12 பேர் ஊக்கத்தொகை பரிசையும் வென்றனர்.

விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here