பேராக்கில் புதிய அனைத்துலக விமான நிலையம் விரைவில் உதயம் ..!

பேராக்கில் ஐந்தாண்டுகளில் புதிய அனைத்துலக விமான நிலையம் திறக்கப்படவிருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த கோல்பிராண்ட் இன்டர்நே‌ஷனல் நிறுவனம், தனியார் நிதியளிப்புடன் விமான நிலையத்தை அமைக்கவிருப்பதாக பேராக் மாநில உள்கட்டமைப்பு, எரிபொருள், தண்ணீர், பொதுப் போக்குவரத்து குழுத் தலைவர் முகமட் நிசார் ஜமாலுதீன் கூறினார்.

இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் அலுவலகத்திலும் போக்குவரத்து அமைச்சிலும் சந்திப்புகள் நடத்தியதாகவும், பேராக் மாநில மந்திரி பெசார் சராணி முகமட்டையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த நிறுவனம் முக்கிய உள்கட்டமைப்புகளின் கட்டுமானத்தில் நிபுணத்துவம் பெற்றது,” என்று அவர் கூறினார்.

மத்திய பேராக் நில, சுரங்க அலுவலகத்தில் விமான நிலையக் கட்டுமானப் பணி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, முகமட் நிசார் செய்தியாளர்களிடம் பேசினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த நிறுவனப் பிரதிநிதிகளுக்கு விமான நிலையம் கட்டப்படவிருக்கும் ஸ்ரீ இஸ்கண்டார் நிலப்பகுதியும் சுற்றிக் காட்டப்பட்டது.

கூட்டத்தின்போது விமான நிலையத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக முகமதட் நிசார் தெரிவித்தார்.

“நாங்கள் இத்திட்டம் தொடர்பான வசதிகளையும் யோசனைகளையும் தீர ஆராய்வோம். விமான நிலையம் கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,618 ஹெக்டர் நிலப்பகுதி, ஃபெல்கிரா நசாருதீன் அருகே அமைந்துள்ளது. இந்த நிலத்தில் ஒரு பகுதி ஃபெல்கிராவுக்கும், மாநிலச் செயலவை நிறுவனத்திற்கும், பேராக் அரசாங்கத்திற்கும் சொந்தமானது,” என்று அவர் கூறினார்.

முன்னதாகப் பரிந்துரைக்கப்பட்ட நிலப்பகுதிக்கு அருகில் பல கிராமங்களும் இடுகாடுகளும் இருந்ததால் விமான நிலையத்திற்குப் பொருத்தமானதாக இல்லை என்றார் அவர்.

விமான நிலையத்தின் கட்டுமானம் இரு பகுதியாக நடைபெறும் என்று கோல்பிராண்ட் இன்டர்நே‌ஷனல் நிறுவனத்தின் தலைமை மேலாளர் ஃபாரிட் இட்ருஸ் கூறினார்.

ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி அனைத்துலக விமான நிலையத்திற்குப் பொருத்தமானதா என்பதை உறுதிப்படுத்த ஆறு மாதகாலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

விமான நிலையத்தைக் கட்டி முடிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here