100 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் தொடர்பில் அமலாக்க அதிகாரி உட்பட இருவர் கைது

பங்ளாதே‌‌ஷ் நாட்டவர்கள் சுற்றுப்பயணிகள்போல் மலேசியாவுக்குள் நுழைய விசா அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், வெளிநாட்டிலுள்ள மலேசியத் தூதரகத்தில் அமலாக்க அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.

அந்த அதிகாரி, பங்ளாதே‌ஷிலும் மலேசியாவிலும் உள்ள வேலை நியமன முகவைகளுடன் சேர்ந்து, பங்ளாதே‌‌‌‌‌‌ஷ் நாட்டவர்களை வேலைக்காக மலேசியாவுக்குக் கொண்டுவர விசா அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

ஒரு விசாவிற்கு 300 முதல் 500 அமெரிக்க டாலர் பெறப்பட்டதாகத் தகவல் அறிந்த தரப்பினர் தெரிவித்தனர்.

“லஞ்சத் தொகை 100 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேலிருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், அரசாங்கம் ஒரு விசாவுக்கு விதிக்கும் கட்டணம் 105 ரிங்கிட் மட்டுமே,” என்று அந்தத் தரப்பு கூறியது.

கைதான மற்றொருவர், வெளிநாட்டு ஊழியர்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்று நம்பப்படுகிறது. இவர் அமலாக்க அதிகாரியுடன் சேர்ந்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

இருவரும் வியாழக்கிழமை (ஜூலை 27) மாலை 6.30 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர். இருவருமே 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஆணையத்தின் கள்ளப்பணத் தடுப்புப் பிரிவும் குடிநுழைவுத் துறையும் ஏப்ரல் மாதம் தொடங்கிய “ஓப்ஸ் டாகா” சிறப்பு நடவடிக்கையின் தொடர்பில் அதே அமைப்பில் கைதான மூன்றாவது அதிகாரி இவர் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம், பங்ளாதே‌ஷில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாற்றிய இரு அதிகாரிகளை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது.

புலனாய்வாளர்கள் மூன்று மில்லியன் ரிங்கிட்டுக்குமேல் மதிப்புள்ள சொத்துகளையும் 20 வங்கிக் கணக்குகளையும் கைப்பற்றி முடக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here