ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி ; சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி

ராமேஸ்வரி ராஜா

ஈப்போ, ஜூலை. 30

உலகளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளை பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில்  ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி என இப்பள்ளி இன்று மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

ஒருமித்த குரலாக மகிழம்பூ தமிழ்ப்பள்ளி இயங்கி வருவதால்தான் இத்தனை தொடர் சாதனைகளை மேற்கொள்ள முடிகிறது. இதையே பின்பற்றி பிற பள்ளிகளும் செயல்பட்டால் நாட்டிலுள்ள எல்லா தமிழ்ப்பள்ளிகளும்  சாதனைப் பள்ளிகளாக பெயர் பதிக்கும் என நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப் புரிந்து பேசிய பேராக் மாநில கல்வி திணைக்களத்தின் உதவி இயக்குநர் மு. அர்ஜுனன் தெரிவித்தார்.

மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் 350 மாணவர்கள் பயில்கின்றனர். நவீன வசதிகள், 11 வகுப்பறைகளிலும் திறன் தொலைகாட்சிகள், அறிவியல் அறை, கணினி அறை போன்ற சிறப்பு வசதிகள் பள்ளியில் உள்ளன. திறமைசாலிகளாகவும், அனுபவமிக்க மற்றும் பயிற்சி பெற்றவர்களாக இருக்கும் ஆசிரியர்கள், எங்களின் செயல்பாடுகளை தலையில் சுமந்து ஏற்று நடத்தும் பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர், பணியாளர்கள் மற்றும் பள்ளியின் பிற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் துணையுடன் சிறந்த பள்ளியில் ஒன்றாக எங்கள் பள்ளி திகள முடிகிறது. இவர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் தனித்தனியாக சாதனைப் புரிவதையும் கடந்து பள்ளியின் அனைத்து மாணவர்களும் உலக மற்றும் தேசிய சாதனைகளை வெற்றிகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த ஆத்திச்சூடி சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் மு. கோகிலாவாணி கூறினார்.

திருக்குறளையும் பாரதியாரையும் அதிகம் பேசியிருப்போம், சொல்லிக்கொடுத்திருப்போம். ஆனால் ஆத்திச்சூடியை முதல் சில வரிகளைக் கற்றுக்கொள்வதோடு விட்டுவிடுவோம். வழிகாட்டலாக வாழ்க்கை முழுக்க மனதில் நிலைநாட்டகூடிய சிறப்புகளை ஆத்திச்சூடி கொண்டிருக்கிறது. 109 ஆட்டிச்சூடிகளையும் மாணவர்கள் மனனம் செய்து ஒப்புவிக்கும் பொழுது அதன் தத்துவங்கள் அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் என நீதிபதிகளில் ஒருவராக பணியாற்றிய கிரீக் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலச்சந்திரன் ஜெயராம் கருத்துரைத்தார்.

மாணவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு ஆத்திச்சூடியாக ஒப்புவித்த பின்னர் மீண்டும் குழுவாகவும் இணைந்து அதனை மேடையில் படைத்தனர். இந்த சாதனையை மக்கள் ஓசை முகநூலில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததற்கான உறுதி சான்றிதழை ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் சு. சந்திரசேகர் தலைமையாசிரியர் கோகிலாவாணியிடம் ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here