பக்கத்தான் ஹராப்பான்-தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பு – அன்வார்

 

கோலாலம்பூர்ஆகஸ்ட்டு 8 :

இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு மக்களாதரவு கைகொடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பக்காத்தான் ஹராப்பான் கட்சித் தலைவருமான அன்வார், மக்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஆதரவை மதிப்பிடமுடியும் என்று கூறினார்.

“இதுவரை பார்க்கையில், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது மக்களிடையில் எங்களுக்கு பரவலான ஆதரவு இருப்பது தெரிகிறது.

“பக்காத்தான் – தேசிய முன்னணி வேட்பாளர்களை மக்கள் முன்பைவிட அதிகமாக ஏற்கின்றனர்,” என்று சிம்பாங் அம்பாட் அருகே இன்று செவ்வாய்க்கிழமை மக்களைச் சந்தித்த பிறகு பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்ற கணிப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கெடா, கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களை பெரிக்காத்தான் நே‌ஷனல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் பக்காத்தான் – தேசிய முன்னணி கூட்டணியின் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதால் அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவு கூடியிருப்பதாக அன்வார் கூறினார்.

“முன்பு, எதிர்மறையான கருத்துகளே எங்களுக்கு கிடைத்தன. “அன்வார் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்திடுவார் என்று அவர்கள் நினைத்தனர். மேலும் அன்வார் எல்லா மாணவர்களையும் அரைப்பாவாடை அணிய அனுமதிப்பார் என்றனர்.

“பழிச்சொல் கலாசாரத்தின் ஒரு பகுதியானது, ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் எதுவுமே நடக்கவில்லை என்பது மக்களுக்கு இப்போது தெரியும்.

“அதனால் எங்களுக்கான ஆதரவில் சாதகமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது,” என்று அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here