கோலாலம்பூர்:
மலேசியாவில் ‘புடி மடானி’ (BUDI MADANI) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் RON95 பெட்ரோல் மானியம், T20 எனப்படும் அதிக வருமானம் பெறும் பிரிவினருக்கும் தற்போதைக்குத் தொடரும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாங்கானில் நடைபெற்ற வர்த்தக வாகனக் கண்காட்சியைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் மானியத்தை மீட்டுக் கொள்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வந்தாலும், தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இன்றி தற்போதைய நிலை நீடிப்பதாகத் தெரிவித்தார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கக்கூடாது என்பதில் அமைச்சரவை உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மலேசியக் குடிமக்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, எவ்விதக் கசிவுமின்றி மானியத்தைப் பெறுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.
T20 அல்லது T15 பிரிவினருக்கான மானியங்களை ரத்து செய்வது குறித்து தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றம் (MTEN) ஆய்வு செய்து வருவதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியான நிலையில், தற்போது அமைச்சரின் இந்த விளக்கம் அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.






















