பாலிக் பூலாவ், ஆகஸ்ட்டு 11:
மலேசியாவை இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்தால், ஆசியாவிலேயே மிகச் சிறந்த நாடாக மலேசியா மாறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், எட்டு மாதங்களுக்கு முன்பு நாட்டின் நிர்வாகத்தை தாம் கைப்பற்றியதில் இருந்து, மலேசிய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கான பிரச்சினைகளை வென்றெடுப்பதில் ஒற்றுமை அரசாங்கத்தின் சாதனையின் அடிப்படையில் இந்த நம்பிக்கை உள்ளது என்றார்.
“விவசாயம் (மானியம்), ரப்பர் (சிறு உரிமையாளர்கள்), ராணுவ வீடுகள், அரசு ஊழியர் சம்பளம், மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், இந்த எட்டு மாதங்களுக்குள் அதிகபட்ச முன்னேற்றத்தை அடைய முயற்சித்திருக்கிறோம்.
“இதே வளர்ச்சியில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆட்சி செய்வோம் என்று கற்பனை செய்து பாருங்கள், அவ்வாறு நடந்தால் இறைவன் கிருபையால் மலேசியா ஆசியாவில் ஒரு சிறந்த தேசமாக மாறும்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) இங்குள்ள கூலாய் கலுட் ஹாட் ஸ்டாலில் உள்ளூர் மக்களுடன் இணைந்து மதிய உணவிற்காக கூடியவேளையில் தெரிவித்தார்.
அரசு, தனியார் துறை ஊழியர்களின் சம்பள விகிதத்தை மேம்படுத்துவது உட்பட நாட்டில் உள்ள மக்களின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளதாக அன்வார் கூறினார்.
எனவே, குறிப்பாக பினாங்கில் உள்ள மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) வாக்களிக்கச் செல்லும்போது பக்காத்தான் மற்றும் பாரிசான் நேசனலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு ஆதரவு அதிகம் தெரிகின்றன. அதுபோல மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வர் கூறினார்.








