(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலம் 2025ஆம் ஆண்டில் 8.0 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைப் பதிவு செய்து, தேசிய வளர்ச்சி விகிதமான 5.2 சதவீதத்தை விஞ்சி நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஜோகூர் மாநிலப் பொறுப்பு மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பயணத்திற்கு தொடர்ந்து ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கி வரும் ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலுக்கு ஆழ்ந்த நன்றியையும் மரியாதையையும் தெரிவித்தார்.
இந்தச் சாதனை, ‘மாஜூ ஜோகூர் 2030’ வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் சரியான திசையில் பயணிப்பதை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார். அதேவேளை, ஜோகூரின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், தரமான முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாநில அரசு ஏற்படுத்தியுள்ள சாதகமான முதலீட்டு சூழலையும் இது பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

இந்த வெற்றிக்குப் பங்களித்த ஜோகூர் மாநில முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் லீ திங் ஹான், மாநில அரசின் அதிகாரிகள், கூட்டாட்சி அரசு, அமைச்சுகள், துறைகள், சம்பந்தப்பட்ட முகமைகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் டத்தோ ஒன் ஹாஃபிஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்தச் சாதனை பெருமை கொள்வதற்கான ஒன்று அல்ல; மாறாக ஜோகூர் மக்களுக்காக இன்னும் அதிக பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டிய கடமையை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் தொடர்ந்த நம்பிக்கையும் ஆதரவும் இருந்தால், மாநிலத்தின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வந்து, மேலும் அதிக முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் அனைவரும் பயனடையும் வளமான எதிர்காலத்தை உருவாக்க மாநில அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.




















