7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரைஇறுதிச் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதே போல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு மலேசியா அணி முன்னேறியது.
இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய-மலேசிய அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே சமயம் மலேசியா அணி முதல் முறையாக இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது.









