கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 15:
கடந்த 12ஆம் தேதி நடந்து முடிந்த மாநிலத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கம் வசம் உள்ள மாநிலங்களிலும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு ஓரளவு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
அதைப் பாராட்டிய பெரிக்கத்தான் நேசனல் கூட்டணித் தலைவர்களுள் ஒருவரான ஹம்ஸா ஸைனுடின், இந்த தேர்தலின் முடிவிலிருந்து மக்கள் மாற்றத்தை விரும்புவதை காட்டுவதாகக் கூறினார்.
மக்கள் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காணக் கூடிய அரசாங்கத்தை விரும்புகின்றனர் என்றார் அவர்.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
பினாங்கில் ஏற்கனவே 10 இடங்களை வைத்திருந்த பெரிக்காத்தான் நேசனல் தற்போது 11 இடங்களைக் கைப்பற்றியது. அதுபோல சிலாங்கூரில் 4 மடங்கு அதிகமாக 22 இடங்களைப் பிடித்தது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இதுவரை எந்த இடங்களும் பெரிக்காத்தான் நேசனல் வசம் இல்லை. ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் 5 இடங்களை வென்றுள்ளது.
மற்றய 3 மாநிலங்களான திரெங்கானு, கெடா, கிளந்தான் ஆகியவை பெரிக்க த்தான் நேசனல் வசம் இருந்தவை. அவற்றில் அது பெரும் வெற்றி பெற்றது.
மத்திய அரசாங்கத்தின் போக்கால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்ததாக பெரிக்கத்தான் நேசனல் தலைவர்களை ஹம்ஸா பாராட்டினார்.