கல்வி அமைச்சின் புத்தாக்கப் போட்டியில் பிளாட்டினம் வென்றார் பீடோர் பனோப்டேன் தோட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியை செல்வராணி

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், மெட்ரிகுலேஷன் மாநாடு நெகிரி செம்பிலான் கிளானா ரிசோர்ட் விடுதியில் 3 நாட்களுக்கு நடைபெற்றது. மாநாட்டில் கண்காட்சி படைப்பிற்கு தேர்வாகியிருந்த 40 பள்ளிகளில் ஒரே தமிழ்ப்பள்ளியாக பீடோர் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேர்வாகியிருந்த அதே வேளையில், கல்வி புத்தாக்க பிரிவில் முதல் நிலையில் 2,800 ரிங்கிட் பெற்று பிளாட்டினம் வெற்றியாளராக வாகை சூடியுள்ளார் அப்பள்ளியின் ஆசிரியை செல்வராணி உத்திரக்குமாரன்.

மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நுணுக்கங்களை அதிகம் புகுத்த வேண்டும் எனும் நோக்கத்தில், ‘எதிர்காலத்திற்கான கல்வி தயார்நிலை’ எனும் கருப்பொருளுடன் புத்தாக்க போட்டியினை கல்வி அமைச்சு  நடத்தியது. கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் மாநாட்டிற்கு சிறப்பு வருகைப்புரிந்திருந்தார். பயிற்றுவித்தல், உயர்தர கல்வி சமூகம், புத்தாக்க கல்வி, புத்தாக்க மற்றும் படைப்புக் குழு ஆகிய நான்கு தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில் புத்தாக்க கல்வி எனும் பிரிவில் சிறந்த முறையில் தனது கணித கண்டுபிடிப்பான  ‘முக்கோண வாய்ப்பாடு’ குறித்த  கட்டுரையைப் படைத்துள்ளார் அவர்.

 

 

கண்காட்சியில் அமைச்சரும் அதிகாரிகளும் வியக்கும் வண்ணம் விளக்கங்களை வழங்கினேன். அதில் ஒரு அங்கமாக அண்மையில் மக்கள் ஓசை முகநூல் மேற்கொண்ட நேரலைப் பேட்டியின் வாயிலாக மக்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு குறித்தும் எடுத்துக்காட்டினேன். எனது கண்டுபிடிப்பினால் மாணவர்கள் பயனடைந்து வரும் அதே வேளையில், எதிர்கால கல்வி புத்தாக்க திட்டத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அடையாளம் கண்டு என்னை வெற்றியாளராக தேர்வு செய்தார்கள் என செல்வராணி பூரிப்புடன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியாகவும், தமிழ்ப்பள்ளியின் ஆசிரியையாகவும் எனது வெற்றிகள் என்னை பெருமையடைய வைக்கிறது. எனது முக்கோண வாய்ப்பாடு கண்டுபிடிப்பு கல்வி அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது எனது உழைப்பிற்கான வெற்றியாகவும் கருதுகிறேன் என்றும் மக்கள் ஓசைக்கு வழங்கிய தகவலில் ஆசிரியை செல்வராணி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here