கடந்த ஈராண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி?

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 19:

மலேசியப் பொருளாதார வளர்ச்சி, ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2023 இரண்டாம் காலாண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஏற்றுமதிகளின் சரிவும் உலகப் பொருளியல் பின்னடைவும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும் ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு குறைந்திருப்பதும், மலேசியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியான சீனாவில் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்திருப்பதும் ஏனைய காரணங்களாகும்.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், மலேசியப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக மத்திய வங்கி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

முதல் காலாண்டின் 5.6 விழுக்காடு வளர்ச்சியைவிட இது குறைவு. அதோடு, 2021 மூன்றாம் காலாண்டிலிருந்து இதுவே ஆகக் குறைவான வளர்ச்சி.

ராய்ட்டர்ஸ் ஆய்வுசெய்த பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 3.3 விழுக்காடு வளர்ச்சியைவிடவும் இது குறைவு.

இதனால், ஆண்டு முழுவதற்கும் முன்னதாக முன்னுரைத்த 4 முதல் 5 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தில் குறைவான விகிதமே எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி கூறியது.

“உலகப் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட பலவீனமாக இருப்பதாலும், தொழில்நுட்பப் பின்னடைவு எதிர்பார்த்ததைவிட நீண்டகாலம் நீடிப்பதாலும், பொருளியல் வளர்ச்சி எதிர்மறையான இடர்களை எதிர்நோக்குகிறது,” என்று மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஜீத் கஃபூர் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உலகில் செம்பனை எண்ணெய், இயற்கை எரிவாயுவை ஆகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இந்நிலையில், சுற்றுப்பயணிகளின் வருகையை மேம்படுத்துவதும், உள்நாட்டுத் திட்டப்பணிகளை விரைவாக அமலாக்குவதும் பொருளியல் வளர்ச்சிக்குத் துணை புரியலாம் என்றார் அவர்.

மலேசியாவின் ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு ஜூலை மாதம் 13.1 விழுக்காடு குறைந்ததாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மற்ற புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இறக்குமதிகளும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் குறைந்தன.

உலகப் பொருளியல் மெதுவடையும்போது மலேசியப் பொருளியல் எந்த அளவுக்குப் பாதிப்படையும் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக முவாமலட் வங்கியின் தலைமை பொருளியலாளர் முகமட் அஃப்சனிசம் அப்துல் ர‌ஷீத் குறிப்பிட்டார்.

மலேசியப் பயனீட்டாளர்களும் பெரும்பாலும் கவனமாகவே செலவு செய்வார்கள் என்பதால், இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here