விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு அரசு ஊழியர் உட்பட 8 பெண்கள் கைது

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட்டு 21:

திமூர் லாவூட் மாவட்டத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் அண்டை நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியர் உட்பட எட்டு வெளிநாட்டுப் பெண்களை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்டு 18) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் பட்ஜெட் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பல இடங்களில் போலீசார் ஏழு சோதனைகளை நடத்தியதாக மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.

“சோதனைகளின் போது, விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 முதல் 47 வயதுடைய எட்டு வெளிநாட்டுப் பெண்களையம் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அத்தோடு , இந்த நடவடிக்கைகளின் வருமானமாக கருதப்படும் உபகரணங்களையும் RM2,200 பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அனைத்து பெண்களும் சமூக வருகை அனுமதி விசாவை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாகவும் அவர்களில் சிலரின் அனுமதிச் சீட்டுகள் காலாவதியானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

விசாரணையின் அடிப்படையில், WeChat செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைத் தேடுவதும், சேவைக்காக RM150 முதல் RM250 வரை கட்டணம் வசூலிப்பதும் கண்டறியப்பட்டதாக சோஃபியன் கூறினார்.

சோதனைகளைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் ஒருவர் தான் அண்டை நாட்டில் அரசுப் பணியாளராக இருந்ததை ஒப்புக்கொண்டதுடன், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக விபச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த நாட்டிற்கு வந்ததாகக் கூறியது எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது.

எட்டுப் பெண்களும் மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் வழக்குகள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 372B, குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 15(1)(c) மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1959 இன் விதிமுறை 39B ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here