கோலாலம்பூர்:
மலேசிய மக்களுள் 29 விழுக்காட்டினர்தான் பணிஓய்வு பெறும்போது ஓய்வூதியம் போன்ற வருமானங்களைக் கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதேசமயம் இபிஎப் சந்தாதாரர்களுள் நால்வரில் ஒருவர் என்ற வீத எண்ணிக்கையிலான சேமநிதியை மீட்டுக்கொள்ளும் வயதை அடைந்த 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தொகையை முற்றாகச் செலவழித்து விடுவதாக தரவு காட்டுகின்றது. இதனால் பல மலேசியர்கள் பணி ஓய்வு பெறும்போது வசதிகரமான அல்லது ஏற்ற வாழ்க்கைத் தரத்தைத் தொடரமுடியாமல் போகின்றது.
மேலும் வயதான காலத்தில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் மலேசிய மக்கள் எண்ணிக்கை விகிதத்தோடு ஒப்பிடுகையில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ சம அளவில் உள்ளது.
அண்மையில் 60 வயதுக்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 26.1விழுக்காட்டினர் தங்கள் உடல்நிலை ஒத்துழைக்கும் வரையில் தொடர்ந்து வேலை செய்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தங்களின் பணி ஓய்வுக்குப் பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வருமானத்தை ஈட்டுவதில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே ஒவ்வொரு தலைமுறையினரும் வயதான பிறகு சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டிய முன்னோக்குப் பார்வைக்கு ஓய்வூதியக் கட்டமைப்பை புதுப்பிக்க நாம் முனைய வேண்டும்.
குறிப்பாக யாரும் பின் தங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் அனைத்து நிலையிலான தரப்பினரும் சமூகப் பாதுகாப்பின் நன்மைகளை உறுதி செய்வதற்கும் புதிய தீர்வுகள் அவசியமாகின்றது. இதன் அடிப்படையில் இபிஎப் தரப்பு தனது ஓய்வூதிய பாதுகாப்பு வளையத்தை கட்டங்கட்டமாக விரிவுபடுத்த வேண்டும்.
இன்னும் அதிகமான மக்கள் போதிய அளவிற்கு பணிஓய்வு சேமிப்பைச் சேர்க்கவும் அவர்கள் இபிஎப் சுழற்சியில் ஓர் அங்கமாக இடம்பெறுவதற்கும் இது அவசியமாகின்றது என்று நேற்று இபிஎப் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024 அனைத்துலக சமூக நல்வாழ்வு மாநாட்டினைத் தொடக்கிவைத்தபின் பேசிய பிரதமர் குறிப்பிட்டார்.
அதேசமயம் பாதுகாப்பு, போதிய நிதி ஆகியவற்றை உயர்த்துவதற்கும் ஆக்கப்பூர்வமான பணி ஓய்வு, ஓய்வூதியத்தொகை, திட்ட வரைவின் சீரமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நிதியமைச்சருமான அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப், 2 ஆவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்ஸா, போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோணி லோக் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.





















