‘இந்தியர்களுக்கான திட்டங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்’ – கணபதி ராவ்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறியுள்ளார்.

மாநிலத் தேர்தல்களில் நம்பிக்கை கூட்டணி (PH) மற்றும் தேசிய முன்னணி (BN) மீது நம்பிக்கை வைத்து இந்தியர்கள் வாக்களித்திருந்தாலும், புறநகர்ப்பகுதிகள் உட்பட சில தொகுதிகளில் ஆதரவு மாறுபட்டுள்ளதை பெர்னாமா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வீ. கணபதி ராவ் சுட்டிக் காட்டினார்.

அரசாங்கம் இதனை எளிதாகக் கருதக்கூடாது. ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு இந்தியர்களின் ஆதரவு தொடர, இந்தியர்களின் தேவையை அறிந்து செயல்படுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

‘’பெருமளவில் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் வாக்களித்திருந்தாலும் சில இடங்களில் வாக்குகள் சிதறத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், வாக்குகள் செலுத்தாமல் இருந்திருக்கின்றார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது,’‘ என்றார் அவர்.

பல்வேறு கட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வரும் ஒருமைப்பாட்டு அரசாங்கம் கடந்த எட்டு மாதங்களாக இந்தியர்களுக்கான சிறப்புத் திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தவில்லை என்று கணபதி ராவ் கூறுகிறார்.

வேலை, கல்வி சார்ந்த விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், அரசாங்கம் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பையும் குறைகூற முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

‘’உயர்கல்வி கழகங்களில் நமக்கான இட ஒதுக்கீடுகள் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும். யாருடைய உரிமையையும் நாம் கேட்கவில்லை. சில முயற்சிகளை நாம் செய்தாக வேண்டும்,’‘ என்றார் அவர்.

மேலும், வலுவான இந்திய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியர்களின் விவகாரங்களை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதில் அது முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கணபதி ராவ் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்திய சமுதாயத்திற்கு மாற்றம் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே மக்கள் வாக்களிக்கின்றனர்.

எனவே, இந்தியர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெறுவதற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் விவகாரங்களில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்பதாக கணபதி ராவ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here