பின்லாந்து நிறுவனமான ‘Honest to Goodness ’ன் தயாரிப்பான கோதுமை இல்லாத ஓட்ஸ் என்னும் உணவுப்பொருள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது.
அதில் ஒவ்வாமை ஏற்படுத்தும் ‘குளுட்டன்’ என்னும் பொருள் கலந்திருப்பது கண்டறிப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவ்வமைப்புத் தெரிவித்தது.
மேலும், அந்தத் தயாரிப்பின் தொகுப்பில் ‘குளுட்டன்’ இல்லாத தயாரிப்பு என எழுதப்பட்டிருந்த போதிலும் அந்த ஒவ்வாமைப் பொருள் அதில் கலந்திருப்பதை அவ்வமைப்புக் கண்டறிந்துள்ளது.
பின்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்தத் தயாரிப்பைத் திரும்பப் பெறுமாறு ‘லிட்டில் ஃபார்ம்ஸ்’ என்னும் இறக்குமதியாளருக்கு அவ்வமைப்பு அறிவுறுத்தியது.அந்த இறக்குமதியாளரும் இந்தத் தயாரிப்பு விற்பனையை நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படும் தொகுதிகளின் காலாவதித் தேதிகள் மே 9, 2024லும் அக்டோபர் 27, 2024லும் ஆகும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் உணவுத் தரநிலை அமைப்புகள் தங்கள் சந்தையிலிருந்து இந்தத் தயாரிப்பைத் திரும்பப் பெறுவதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிவித்தது.
இந்தத் தயாரிப்பை ஒவ்வாமை உள்ளப் பயனீட்டாளர்கள் உட்கொள்ளக்கூடாது. இந்தத் தயாரிப்பை ‘குளுட்டன்’ கலந்திருப்பது தெரியாமல் அவர்கள் உட்கொண்டிருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என அந்த அமைப்புப் பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயனீட்டாளர்கள் தாங்கள் இந்தத் தயாரிப்பை வாங்கிய கடையுடன் தொடர்புகொள்ளலாம் என்றும் அது தெரிவித்திருந்தது.