கோலாலம்பூர்:
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் 27 பேரின் உயிரைப் பறித்த பயங்கர தீ விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சு (Wisma Putra) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம், அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்தத் துயரமான தீ விபத்தில் மலேசிய குடிமக்கள் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேங்காக்கில் இருக்கும் அல்லது அங்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் தூதரக உதவிகளையும், உடனுக்குடனான தகவல்களையும் பெறுவதற்கு மலேசியர்கள் தங்களது விவரங்களை ‘இ-கோன்சுலார்’ (e-Konsular) இணையப் பக்கத்தில் பதிவு செய்து புதுப்பித்துக் கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
நேற்று (ஜூலை 12) பேங்காக்கில் உள்ள ஒரு வணிக வளாக மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 27 பேர் பலியானதுடன், 63 பேர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


















