பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டில் முதலை பறிமுதல்

சென்னை: பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்து ஒன்றரை அடி நீள முதலை, ஆமை குட்டி மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தில் வசித்து வருபவர் பாலாஜி தங்கவேல். இவர் மறைந்த பழம்பெரும் காமெடி நடிகர் பாலையாவின் பேரன். இவருக்கு தாம்பரத்தில் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் ஒரு நீச்சல் குளம் உள்ளது.

அந்த நீச்சல் குளத்தை சுத்தப்படுத்த பணியாளர்கள் சென்றனர். அப்போது நீச்சல் குளத்தின் உள்ளே ஒன்றரை அடி நீளத்தில் கருப்பு நிறம் கொண்ட முதலையும் ஒரு ஆமை குட்டியும் இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற வனத்துறையினர் நீச்சல் குளத்தில் இருந்த முதலையையும் ஆமைக் குட்டியையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றை உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தில் முதலையும் ஆமையும் எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். எங்காவது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டதா இல்லை வளர்ப்பதற்காக வாங்கப்பட்டதா என விசாரணை நடத்துகிறார்கள்.

முதலை உள்ளிட்ட விலங்குகளை வீடுகளில் வளர்க்க தடை இருக்கிறது. அது போல் ஆமை உள்ளிட்டவைகளை வளர்க்க வனத்துறையினரிடம் முறையான அனுமதி வாங்க வேண்டியது அவசியம். எனவே விதிமீறல் ஏதேனும் இருக்கிறதா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்படியே பாலையா பேரன் இவற்றை சட்டவிரோதமாக வாங்கியிருந்தால் நீச்சல் குளத்தை எப்படி சுத்தப்படுத்த பணியாளர்களை அழைத்திருப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here