மூவின ஒற்றுமையே வளமிகு மலேசியாவின் மூலாதாரம் – டத்தோ ரமணன்

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கு சிறந்த உதாரணமே நம் நாட்டின் சுதந்திரம்தான்! அன்று மூவினத்தாரும் புதிய விடியலுக்காக ஒன்று கூடியதால் இன்று நம்மால் முழு சுதந்திர வாழ்வை அனுபவிக்க முடிகிறது என பிரதமர் துறையின் மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவர் டத்தோ ஆர்.ரமணன் குறிப்பிட்டார்.

நாட்டின் குறுகிய கால மேம்பாட்டில் பல்லினத்தாரின் பங்கும் அளப்பரியது! உலக நாடுகள் மத்தியில் மலேசியாவின் தனித்துவமாகவும் இது பார்க்கப்படுகிறது. நம் முன்னோர்களின் தூரநோக்கு சிந்தனையால் கட்டமைக்கப்பட்ட மூவின கொள்கைக்கு சிதைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.

“ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பது போல, நாம் நமது ஒறுமித்த வாழ்க்கைச் சூழலிலிருந்து சற்றே விலகினாலும், மிகப்பெரிய அச்சுறுத்தலும் ஆபத்தும் நம்மை நெறுங்கலாம்! இது நாட்டின் இலக்கு நோக்கிய வளர்ச்சிக்கும் தடை ஏற்படுத்தும் என்பதால், வளமிகு மலேசியாவின் அமைதியும் சுபிட்சமும் தொடர்ந்து தழைத்தோங்குவதற்கு மூலாதாரமான பல்லின ஒற்றுமையை நாம் பேணிக் காத்திட வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

எதிரும் புதிருமாக இருந்த அரசியல் கட்சிகள் கூட, வேற்றுமை மறந்து நட்பு பாராட்டியுள்ளனர்; ஒற்றுமை அரசாங்கத்தையும் அமைத்துள்ளனர். நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்காக பகைமை மறந்து நட்பு பாராட்டும் நமது சகோதரத்துவ பண்பை கண்டு அக்கம்பக்கத்து நாடுகளே அதிசயிக்கின்றன!

இதுதான் நமது பண்பாடு! இத்தகைய சகோதரத்துவ மாண்பை கடைபிடிக்காத நாடுகளில் தற்போது வெடித்திருக்கும் புரட்சிகளும் சண்டை சச்சரவுகளும் நம் கண் முன் உள்ள உதாரணங்கள். இதனை உணர்ந்து ஒற்றுமை பேணுவோம்; நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பங்களிப்போம் என்று வலியுறுத்திய டத்தோ ரமணன், தேசம் மீது நேசம் கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும் 66ஆவது சுதந்திர தின் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here