ராமேஸ்வரி ராஜா
தாப்பா:
2023 ஆண்டிற்கான பேராக் கைவினைத் திருவிழா 7 ஆவது ஆண்டாக தெலுக் இந்தான் சாய்வு கோபுர சதுக்கத்தில் (மெனாரா சொண்டோங்) நடைபெற்று வருகிறது. விழாவில் ஒரு அங்கமாக பாரம்பரிய இசை போட்டி நடத்தப்பட்டது. அதில் தாப்பா கம்போங் பஹாங்கைச் சேர்ந்த ஆதி சங்கர தப்பு மேளம் குழு இரண்டாம் இடத்தை வாகை சூடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 3 வரை 10 நாட்களுக்கு பல்வேறு மலேசிய கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வருகைப்புரிந்து வருகின்றனர். அதிலும் பாரம்பரிய இசை போட்டியை கண்டுகளிக்க பல்லின மக்கள் கூடியிருந்தனர்.

போட்டியில் பங்குபெற்ற எங்கள் குழுவின் தமிழரசன் பரஞ்சோதி, ஷர்வின் கதிர்வேல், பிரவின் முனியாண்டி, சுதன் ராஜ் மூர்த்தி, தமிழ் அரசு பரஞ்சோதி ஆகியோர் நமது பாரம்பரிய இசையில் ஒன்றான தப்பு இசையை மேடையில் விறுவிறுப்புடனும் ஈர்க்கும் வகையிலும் வாசித்தனர். அனைவரும் ரசித்து வரவேற்பை வழங்கியது மட்டுமின்றி இரண்டாம் பரிசை வென்றது எங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என அக்குழுவின் தலைவர் இரவின் சந்தனசாமி தெரிவித்தார்.
18 பேர் கொண்ட எங்களின் ஆதி சங்கரர் தப்பு மேளம் குழு 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட இதுபோன்றதொரு போட்டியிலும் இரண்டாம் பரிசை வென்றோம். அத்துடன் ‘மஞ்சள் மகாராணி’ எனும் எங்களின் சொந்த தயாரிப்பிலான யூடியூப் பாடல் 1 லட்சத்துக்கும் அதிகமானோரை இரசிக்கச் செய்ததுவும் எங்களின் இன்னொரு வெற்றி என மக்கள் ஓசைக்கு வழங்கியை தகவலில் அவர் குறிப்பிட்டார்.









