எங்கள் காவிரி எங்கள் உரிமை; குரல் எழுப்பிய கர்நாடக சூப்பர்ஸ்டார்கள்

காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் சூப்பர்ஸ்டார்களாக உள்ள நடிகர்கள் கிச்சா சுதீப் மற்றும் தர்ஷன் தொகுதீபா ஆகியோர் கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.  இதுபற்றி நடிகர் சுதீப் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், எங்களுடைய காவிரி எங்களுடைய உரிமையாக உள்ளது.

பல கருத்தொருமித்த விசயங்களில் வெற்றி பெற்ற அரசானது, காவிரியில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களை கைவிடாது என நம்புகிறேன். உடனடியாக நிபுணர்கள் ஒரு செயல்திட்டம் வடிவமைத்து நீதி வழங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். நிலம், நீர், மொழிக்கான போராட்டத்தில் நானும் குரலெழுப்புகிறேன். கர்நாடகாவை காவிரி தாய் பாதுகாக்கட்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று நடிகர் தர்ஷன் தொகுதீபா வெளியிட்ட செய்தியில், கர்நாடகாவின் பங்கில் உள்ள காவிரி நீரை, கூடுதலாக பெறுவதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு, நிறைய தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது.

நீர்ப்பாசன பகுதியில் நிறைய சேதம் ஏற்பட்டு உள்ளது. அதனால், அனைத்து விசயங்களையும் பரிசீலித்து, விரைவில் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை, அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா தர வேண்டும் என காவிரி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ள சூழலில் அவர்கள் இந்த பதிவை வெளியிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here