நியூ ஜெர்சி:
இந்தியாவுக்கு வெளியே உள்ள கோயில்களில் உலகின் ஆகப்பெரும் இந்துக் கோயில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் அக்டோபர் 8ஆம் தேதி குடமுழுக்குக் காணவுள்ளது.
கடந்த 2011ல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 12 ஆண்டுகள் நடந்தது, தற்போது குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் இந்துக் கோவில் என்ற பெருமையை இக்கோயில் பெற்றுள்ளது.

கம்போடியாவில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில், புராதானப் பின்ன ணியில் உலகின் மிகப்பெரும் இந் துக் கோயிலாகும். 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக்கோயில், யுனெஸ்கோவின் உலக மரபுடைமைச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 183 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயில் வளாகத்தத்தில் ஒரு பிரதான கோயில், 12 உப கோயில்கள், 18 கோபுரக் கட்டமைப்புகள் உள்ளன.

பளிங்கு, கிரானைட், கடுமையான வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் வகையிலான சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கற்கள் முதலியவற்றால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்கேரியா, துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி, இத்தாலியில் இருந்து பளிங்குக் கல், இந்தியா, சீனாவில் இருந்து கிரானைட் ஆகியவை தருவிக்கப்பட்டுள்ளன.
பழங்கால இந்து மத நூல்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் 10,000க்கும் மேற்பட்ட சிலைகளும் சிற்ப வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

உலகின் பல சிறப்புகளையும் உள்ளடக்கிய இக்கோயிலைக் காண ஆயிரக்கணக்கான இந்துக்களும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்கெனவே திரளத்தொடங்கியுள்ளனர்.