கெடா மற்றும் பெர்லிஸில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்:

கெடா மற்றும் பெர்லிஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேறி, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், சபாவிலுள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் இன்று காலை வரையில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கெடாவில், நேற்றிரவு 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 81 குடும்பங்களைச் சேர்ந்த 268 பேராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இரண்டு புதிய நிவாரண மையங்கள் திறக்கப்பட்டதாக மாநில குடிமைத் தற்காப்புப் படை (APM) பேரிடர் மேலாண்மை செயலகத் தலைவர் மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.

கெடாவில் தற்போது நான்கு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸில், நேற்று 18 பேர் மட்டுமே வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், ஆராவ்வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் மாநில APM இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் (PA) முஹமட் இசைமி முஹமட் தாவூட் ஐ தொடர்பு கொண்ட போது, அனைத்து வெளியேற்றப்பட்டவர்களும் அதாவது 37 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கிய 11 குடும்பங்கள் டேவான் SK ஆராவ்வில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதற்கிடையில், சபா, Beaufort இல் உள்ள ஐந்து கிராமங்களில் இருந்து வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 46 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேராக மாறாமல் உள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here