தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் நடத்தப்பட்ட மிலாதுன் – நபி ஊர்வலம் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டுவதாக எம்.எம்.ஒய்.சி. எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் மன்ற ஆலோசகர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கருத்துரைத்தார்.
இந்த மன்றத்தின் ஏற்பாட்டில் காலை 10 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் நாடு தழுவிய அளவில் இருந்து 2,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த மன்றம் ஒவ்வோர் ஆண்டும் இந்த ஊர்வலத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது. முன்னதாக நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஊர்வலம் சில ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போனது என நேற்று ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
அவ்வகையில் 9ஆவது ஆண்டாக இம்முறை ஊர்வலம் மிகவிமரிசையாக நடத்தப்படுகிறது. மஸ்ஜிட் இந்தியா பள்ளிவாங்லில் தொடங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் அணிவகுத்து நடந்துவந்தோம்.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் நாட்டில் வாழும் இந்திய முஸ்லிம் மக்களையும் இந்த ஊர்வலம் ஒன்றுபடுத்துகிறது. குறிப்பாக வெகுதூரத்தில் இருந்து வந்து மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவ்வகையில் இன்றைய தினம் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் 4,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன. என பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவருமான ஜவஹர் அலி சுட்டிக்காட்டினார். இதனிடையே இந்த ஊர்வலத்தில் எம்எம்ஒய்சி மன்றத் அஸ்மி, இதர அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
எஸ். வெங்கடேஷ், பி. மலையாண்டி