தேசிய அளவிலான மீலாது நபி (ஸல்) கொண்டாட்டம் ; 6,000 பேர் பங்கேற்பு

புத்ராஜெயா:

இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெற்ற தேசிய அளவிலான இறைதூதர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீலாது நபி பிறந்த தினக் கொண்டாட்டங்களில் அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் தனியார் ஏஜென்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 131 குழுக்களில் இருந்து மொத்தம் 6,000 பேர் பங்கேற்றனர்.

இன்று காலை காலை 7.30 மணிக்கு தொடங்கிய அணி வகுப்பு நிகழ்வு, பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) டத்தோ டாக்டர் முகமட் நயிம் மோக்தார் தலைமை யில் புத்ராஜெயா வின் ஸ்ரீ ஜெமிலாங் பாலத்தில் இருந்து புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு சுமார் 1.1 கி.மீ தூரம் வரை அனைவரும் நடந்து சென்றனர்.

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமூனா இஸ்கந்தரியா ஆகியோரின் வருகையுடன் கொண்டாட்டத்தின் சிறப்ப்பு நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது.

மேலும் இந்நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் அமைச்சரவையை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மௌலிதுர் ரசூல் அல்லது மீலாது நபி என அழைக்கப்படும், முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டம் மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டாட்சி அல்லது மாநில அளவில் கொண்டாடப்படும் ஒரு அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வாகும்.

இந்த கொண்டாட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூருவதற்காக மட்டுமல்ல, மாறாக முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, போராட்டம் மற்றும் அவரது சிறந்த வாழ்வியலை பின்பற்றுவதற்கு சமூகத்தை ஊக்குவிக்கும் சிறந்த வழியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here