நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். இதய செயல்பாடுகள் இல்லை என்றால், நாம் உயிருடனே இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் இதய நோய் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா?

உலகளவில் ஏற்படும் இறப்புகளில் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். இதய நோய் இளம் வயதிலேயே வருவதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.
மாரடைப்பு மற்றும் இதய நோய் வராமல் உங்கள் இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். நம் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், அதை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த இதய தினத்தை முன்னிட்டு, இதய பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், இதய பரிசோதனைசெய்ய சரியான நேரம் எதுவென்பதைப் பற்றியும் காண்போம்.
இதய பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 1.79 கோடி இறப்புக்கு முக்கிய காரணம் இதய நோய்களாகும். அதுவும் இதில் 85% மரணம் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகிறது. இந்தியாவில் இதயம் தொடர்பான நோய்களால் நிறைய பேர் மரணமடைவதற்கு காரணம், சரியான நேரத்தில் நோயை கண்டறியாமல் இருப்பதும், வாழ்க்கை முறை மாற்றங்களும் தான். ஆனால் இதய பரிசோதனைகளை வழக்காக செய்வதன் மூலம், இதய நோயை ஆடம்பத்திலேயே கண்டறிந்து, அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
எனவே நீங்கள் இதய நோயால் மரணமடையக்கூடாதெனில், வருடந்தோறும் முழு உடல் பரிசோதனைகளை செய்யுங்கள். இப்படி பரிசோதனைகளை செய்வதன் மூலம், உயிருக்கு ஆபத்தான நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்து சரிசெய்ய வசதியாக இருக்கும். யாரெல்லாம் தவறாமல் இதய பரிசோதனைகளை செய்ய வேண்டும்? தற்போது மாரடைப்பு எந்த வயதினருக்கும் வருகிறது. எனவே இதய பரிசோதனைகளை செய்வதற்கு எந்த ஒரு வயது கட்டுப்பாடும் இல்லை.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசனின் கூற்றுப்படி, சில வகையான இதய பரிசோதனைகளை 20 வயதிலேயே செய்ய தொடங்க வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட வயதினர் வழக்கமாக இதய பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அதுவும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயம் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே ஒருவரை அமைதியாக கொல்லக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளாகும் மற்றும் இவை இரண்டும் இதய ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இப்பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கட்டாயம் இதய பரிசோதனைகளை வழக்கமாக கொள்ள வேண்டும்.
இதயத்தை பரிசோதிக்க சரியான நேரம் எப்போது?
வழக்கமான இதய பரிசோதனைகள் மற்றும் ஸ்க்ரீனிங்கை 20 வயதிலேயே தொடங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு 2-4 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனைகளை செய்ய வேண்டும். இது தவிர இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், BMI அளவு போன்றவற்றையும் 20 வயதில் இருந்தே சோதனை செய்ய வேண்டும். அதோடு 30 வயதுகளில் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஏனெனில் 30 வயதுகளில் உடலில் அனைத்துவிதமான பிரச்சனைகளும் எழத் தொடங்கும். இதற்கு காரணம் 30-களில் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் தான்.
இதய நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்
*இரத்த பரிசோதனைகள்
*எலக்ட்ரோகார்டியோகிராம் (ECG)
*உடற்பயிற்சி அழுத்த பரிசோதனை

இந்த சோதனையில் கடுமையான வேலைகளின் போது இதயம் எவ்வளவு கடினமாக வேலை செய்ய வேண்டும் என்பதை மதிப்பிடுகிறது.
*கரோனரி ஆஞ்சியோகிராம் அல்லது கரோனரி கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT)
* ஆஞ்சியோகிராம்
இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துவிட்டதா அல்லது அடைப்பு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்கும் சோதனையாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகள் இதய ஆரோக்கியத்தை கண்காணிக்க செய்யப்படும் பரிசோதனைகளாகும். எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வருடம் ஒருமுறை தவறாமல் இதய பரிசோதனைகளை செய்யுங்கள்.





















