(ரெ.மாலினி)
மலாக்கா:
தாமான் ஆயர் குரோ ஹைட்ஸில் நேற்று மாலை நிகழ்ந்த சம்பவத்தில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட தங்கையை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.
நேற்று மாலை 4.30 மணியளவில், முகமட் லோக்மான் அஃபாண்டி (12), அவரது தங்கை முகமது ஆதாம் அஃபாண்டி (10) மற்றும் இரண்டு நண்பர்கள் லேசான மழையில் வடிகாலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் கிறிஸ்டோபர் படிட் கூறுகையில், தங்கை திடீரென வடிகாலில் விழுந்து கடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட சிறுவன், ஒரு நண்பனின் உதவியுடன் தங்கையை காப்பாற்ற முயன்றான்.
“கடும் நீரோட்டத்தில் மூன்று குழந்தைகளும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உயிர் தப்பினர்.
“தொலைவில் இருந்த மற்றொரு நண்பன், அருகிலிருந்த அண்டை வீட்டாரின் உதவியை நாடினான். மாலை 5.51 மணிக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது,” என்றார் அவர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். சுமார் 20 நிமிடங்களில் சிறுவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

“சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அவருக்கு முதல் உதவி (CPR) வழங்கினர். பின்னர் சிறுவன் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், சிகிச்சை பெற்று வந்த மஞ்சள் மண்டலத்தில் இரவு 8.09 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
“சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனையின் குற்றவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.



















