மனு ராம் எனும் டுவிட்டர் பயனர், சிலாங்கூரில் உள்ள டாமன்சாரா உத்தாமாவில் உள்ள தனது வீட்டிலிருந்து மலாக்காவில் உள்ள அஃபாமோசா கோட்டைக்கு எவ்வாறு நடந்து சென்றார் என்பதைப் பற்றிய அவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நவம்பர் 15 அன்று, அவர் பகிர்ந்துள்ள 159 கி.மீ. தூரப் பயணத்தின் புகைப்படங்களும் வழியில் எடுத்த வீடியோவின் சிறிய துணுக்குகளும் பகிர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இவ்வாறு செய்வதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நான் மற்றவர்களைவிட தனித்து தெரியப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறேன். வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என்றார் அவர்.
இதைத்தவிர்த்து வேறு காரணிகளும் உள்ளனவா என்று அவரிடம் கேட்டபோது “நான் வேலைக்காக இருநூறு முதல் முந்நூறு இடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறேன், பல நேர்காணல்களுக்குச் செல்கிறேன்.ஆனால் எதுவும் எனக்கு சாதகமாக அமையவில்லை. நான் நிலைகுலைந்ததாகவும் கிட்டத்தட்ட பயனற்றதாகவும் உணர்ந்தேன்” என்றார்.
“எனவே நான் சொந்தமாகச் செய்யக்கூடிய ஒன்றைப் பற்றி நினைத்தேன். அது எனக்கு ஒரு சாதனை உணர்வைத் தருகிறது. இது ‘பைத்தியகாரத்தனம்’ என்று எல்லாரும் நினைக்கும் ஒன்று. ஆனால் என்னால் செய்ய முடியும் என்று நான் உண்மையிலேயே உணர்கிறேன்” என்று மனு ராம் கூறினார்.






















