சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன் ஆறுமுகம்

 

இன்று டத்தோ ஆறுமுகத்தின் நினைவு நாள்

 

(எஸ். வெங்கடேஷ்)

                மலேசிய கால்பந்து துறையில் கொடிகட்டிப் பறந்த இந்தியர்கள் என்றாலே நம் நினைவுக்கு வரும் விளையாட்டாளர்களுள் முன்னாள் கோல் காவலர் ஸ்பைடர் மேன் டத்தோ ஆறுமுகமும் ஒருவராவார்.

                மலேசிய கால்பந்து துறையின் பொற்காலமாக கருதப்படும் 70-80 ஆம் ஆண்டுகளில் தேசிய கால்பந்து அணி மட்டுமல்லாது சிலாங்கூர் கால்பந்து அணியின் வெற்றிக்கும் இவரும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

                1953ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் தமக்கு 18 வயதாக இருக்கும் போது 1971ஆம் ஆண்டு சிலாங்கூர் எப்ஏ அணிக்கு கோல் காவலராக களமிறங்கினார். முதலில் பர்ன்லி கிண்ணப் போட்டியில் களமிறங்கிய அவர் அதன்பின்னர் சிலாங்கூர் அணியைப்  பிரதிநிதித்து 1988ஆம் ஆண்டு வரையில் விளையாடியுள்ளார்.

                இந்தக் காலகட்டத்தில் அவர் மலேசிய கிண்ணத்தை 8 முறை வென்றுள்ளார். 1973, 1975, 1976, 1979, 1981, 1982, 1984, 1986ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் அணி மலேசிய கிண்ணத்தை வெல்வதற்கு இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

                மேலும், 1984ஆம் ஆண்டு  மலேசிய லீக் போட்டியில் சாம்பியனாகவும் சிலாங்கூர் வாகை சூடுவதற்கு ஆறுமுகமும் முக்கிய  காரணமாவார்.

                அதுமட்டுமன்றி, 1985, 1987ஆம் ஆண்டுகளில் இவர் சிலாங்கூர் அணியுடன் இணைந்து மலேசிய செரட்டி கிண்ணத்தையும் வென்றுள்ளார். இந்நிலையில்  1973ஆம் ஆண்டு மலேசிய அணியில் இணைந்து விளையாட ஆறுமுகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

                இவர் 1973ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரையில் தேசிய அணியைப் பிரதிநிதித்து 142 ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார். அதில் 1973, 1974, 1976,1979, 1986ஆம் ஆண்டுகளில் மலேசிய அணியுடன் இணைந்து மெர்டேக்கா கிண்ணத்தையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

                அதோடு, 1977,1979ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தேசிய கால்பந்து அணியிலும் ஆறுமுகம் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக, 1974ஆம் ஆண்டு ஆசியா  விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆறுமுகம் தேசிய அணியிலும் கோல் காவலராகக் களமிறங்கியுள்ளார்.

                அதிலும் தேசிய கால்பந்து அணியில் 50 ஆட்டங்களிலும் கோல் எதையும் விடாமல் தென்கிழக்காசிய அளவில் ஆறுமுகம் சாதனை படைத்துள்ளார். இப்படி பல சாதனைகள் செய்த ஆறுமுகம் தனது 35ஆவது வயதில் காலமானார்.

                1988ஆம் ஆண்டு டிங்ம்பர் 18ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா பெடரல் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில்  ஆறுமுகம் காலமானார். அவரின் மரணம் மலேசிய கால்பந்து துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

                டத்தோ ஆறுமுகம் தேசிய, சிலாங்கூர் கால்பந்து விளையாட்டுத் துறையில் செய்த பல்வேறு சாதனைகளை நினைவுகூரும் வகையில் 2011ஆம் ஆண்டு அவருக்கு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.

                இது தவிர இன்னும் பல கௌரவிப்புகளும் அவருக்கு வழங்கப் பட்டுள்ளன.

                மெலிந்த உயரமான தேகத்தைக் கொண்ட ஆறுமுகம் கால்பந்து விளையாட்டில் ரசிகர்கள் மத்தியில் ஸ்பைடர் மேன் என்றே அழைக்கப் படுகின்றார். ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தைப் போலவே அங்கும் இங்கும் குதித்து எதிர்வரும் பந்தை தடுத்து நிறுத்துவதால் இவருக்கு அந்தப் புனைபெயர் வைக்கப்பட்டது.

                டத்தோ ஆறுமுகம் காலமாகி 35 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்  இன்றளவும்  அவரின் புகழ் குறையவில்லை என்பது உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here