மீஃபா ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி

 

தேசிய அளவில் முதன்முறையாக பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன

எஸ்.வெங்கடேஷ்

 

கோலாலம்பூர், டிச 22.

மீஃபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை டிசம்பர் 23ஆம் தேதி தொடங்கி இரு நாட்களுக்குத் தேசிய அளவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி நடத்தப்படுகிறது.

12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் ஆண்/பெண் என மொத்தமாக 60 அணிகள் களமிறங்குவதாக மீஃபா நிர்வாகத் தரப்பினர் தெரிவித்தனர்.

மீஃபா பியோன்ட் என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றோம். முன்னதாக கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இப்போட்டி சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு மீண்டும் இப்போட்டி நடத்தப்பட்டது. இதனை அடுத்து இவ்வாண்டு மிகவும் பிரமாண்டமான முறையில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது. அதிலும் முதல்முறையாகத் தேசிய அளவிலான தமிழ்ப்பள்ளிகளைச் ஙே்ர்ந்த மாணவிகளும் இப்போட்டியில் பங்குபெறுகின்றனர்.

இதன் அடிப்படையில் 40 ஆண்கள் அணிகளும் 20 பெண்கள் அணிகளும் இப்போட்டியில் களமிறங்குகின்றன. ஆண்கள் பிரிவில் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் பெண்கள் பிரிவில் 4 குழுக்கள் உள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் தலா 5 அணிகள் இடம்பெறும். முன்னதாக மாநில அளவிலான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் இந்தத் தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுக்கின்றன.

பினாங்கு யுஎஸ்எம் பல்கலைக்கழகத்தின் கோப்பா அரேனாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 2 புதிய கிண்ணங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஆண்களுக்கு பிரிவுக்கு மீஃபாவின் அமைப்பு உறுப்பினர் டத்தோ எம்.எஸ். மணியம் கிண்ணமும் பெண்கள் பிரிவுக்கு அன்னை டான்ஸ்ரீ மங்களம் கிண்ணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வழக்கம்போல் மீஃபா பியோன்ட் கிண்ணம் இந்தப் போட்டியின் முதன்மை கிண்ணமாக விளங்கும். இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல்நிலையில் வெற்றிபெறும் அணிக்குக் கிண்ணத்தோடு 1,500 ரிங்கிட் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

அதேபோல் 2ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஆயிரம் ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்படும் நிலையில் 3ஆம், 4ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 500 ரிங்கிட் வழங்கப்படும்.

தொடர்ந்து பெண்கள் பிரிவில் முதல் நிலையில் வெற்றிபெறும் அணிக்கு 1,000 ரிங்கிட்டும் 2ஆம் நிலை வெற்றியாளர்களுக்கு 500 ரிங்கிட்டும் வழங்கப்படும். மேலும் இந்தப் பிரிவில் 3ஆம், 4ஆம் அணிகளுக்குத் தலா 300 ரிங்கிட் பரிசுத்தொகை தரப்படும் என அண்மையில் நடைபெற்ற இந்த அணிகளுக்கான குழு தேர்வு கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே இந்தப் போட்டியில் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த கோல் காவலர் எனத் தனிப்பட்ட பரிசுகளும் தரப்படவிருக்கின்றன. இந்தப் போட்டியை பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு சோமு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைப்பார் எனவும் அவர்கள் கூறினர்.

முன்னதாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீஃபா தலைவர் அன்பானந்தன், துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், டத்தோ எஸ். பதி உள்ளிட்ட நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here