உலகில் எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும், அங்கே பொதுவாக இந்த 13ஆம் எண் அறை இல்லாததை பார்க்க முடியும். இதற்கான காரணத்தை இங்கு பார்க்கலாம். உலகில் முழுவதும் குறிப்பாக மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம். அதிலும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என்றால் வீட்டிலேயே முடங்கி விடும் பலரைக் காணலாம்.
நீங்கள் உலகின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது விதவிதமான ஹோட்டல்களில் தங்கியிருக்கக் கூடும். பல கட்டிடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும். அதில் நீங்கள் பல முறை, ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில் 13 வது மாடி பெயர் இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம். அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏன் 13 என்றால் அச்சம்? மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக எண் 13 என்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் கடைசி விருந்து (Last Supper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை 13 என கூறப்படுகிறது. மேலும் யேசு மரித்த நாள் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 13 எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் அச்சத்தில் உறைந்து விடுகின்றனர்.
இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் கூறுகின்றனர். எண் 13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் உலகின் பல இடங்களில் குறிப்பாக மேலை நாடுகளில் அறை எண் 13 அல்லது 13 வது தளம் காணமுடியாது. 12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக 14 வது தளம் இருக்கும்.
இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் 13ம் எண்ணை காண முடியாது. அதே போல் பல பெரிய ஹோட்டல்கள் அல்லது கட்டிடங்கள் சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் இருப்பது இல்லை.




















