பாரிஸ்:
வடக்கு நகரான லில்லுக்குச் செல்லும் அந்நாட்டின் முக்கியமான விரைவுச்சாலை ஒன்றை மறித்து, பிரெஞ்சு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இது தலைநகர் பாரிசில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசுக்கு எதிராக நெருக்கடியை அதிகரிக்க உள்ளூர் விவசாய சங்கங்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்த அறைகூவல் விடுத்துள்ளன. உணவுப் பொருள்களுக்கு குறைந்த விலை, தேவைக்கு அதிகமான ஒழுங்கு முறை விதிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் தங்களுக்கு போதுமான உதவி வழங்கவில்லை என அந்தச் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தால் பாரிசுக்கு வடக்கே உள்ள A 1 விரைவுச்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியுள்ளதாக பிரான்ஸ் நாட்டு போக்குவரத்து அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.

மேலும் பாரிஸ் நகரின் தெற்குப் பகுதியிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் விவசாயிகள் சாலைத் தடுப்புகளை அமைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகளின் கோபத்தை தணிக்க அவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























