ஜார்ஜ் டவுன்:
பிறை ஆற்றின் குறுக்கே 600 மிமீ நீர்க்குழாயைத் திசைதிருப்பல் செய்வதற்காக இன்று திங்கட்கிழமை (ஜன 29) தொடங்கவிருந்த நீர் விநியோகத் தடை, நாளை செவ்வாய்க்கிழமை (ஜன 30) இரவு 11.30 மணிக்குத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) தெரிவித்துள்ளது.
இதனை செயல்படுத்தப்படுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனர்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு இந்த விஷயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று PBAPP இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்குள் மீண்டும் நீர் வழங்க திட்டமிட்டுள்ளோம், அதனால் பாதிக்கப்படவுள்ள அனைத்து 120,000 நுகர்வோர்களும் இந்த நீர் விநியோகத் தடையை செயல்படுத்துவதற்கு முன் போதுமான தண்ணீரை சேமிக்க அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.”
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை பிறை ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள 1,350மிமீ குழாயில் பெரிய அளவில் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் மூன்றாவது முறையாக தடைபட்டதாக PBAPP தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அவற்றை சரிசெய்து திருத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், குழாயில் இன்னமும் கசிவு நீடிப்பதாகவும், அதை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் வரை மீண்டும் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.