திருமணம் தேவையற்றது: பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்கள் கருத்து

திருமணம் செய்துகொள்வதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது. இந்த ஆய்வை கொள்கை ஆய்வுக் கழகம் நடத்தியது. குடும்பம், நல்வாழ்வு, வேலை, வாழ்வின் மற்ற அம்சங்கள் ஆகியவை குறித்து சிங்கப்பூரர்களின் மனப்போக்கைத் தெரிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வேலையில் கவனம் செலுத்தி, அதில் பதவி உயர்வுகளைப் பெற்று வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கு இளம் சிங்கப்பூரர்கள் முன்னுரிமை தருகின்றனர். அதுமட்டுமல்லாது, குழந்தை வளர்ப்பால் ஏற்படும் செலவுகள், மனவுளைச்சல் ஆகியவை குறித்து அவர்கள் அக்கறை தெரிவித்தனர். இதற்கிடையே, தனிமையில் வாடுவதாகக் கூறும் இளம் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட சில சமூகப் பிரச்சினைகள் குறித்து பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அதிகம் கவலைப்படுகின்றனர். அந்தப் பட்டியலில் வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலை முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை சிங்கப்பூரில் வசிக்கும் 2,356 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கெடுத்தவர்கள் வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

21 வயதிலிருந்து 34 வயது, 35 வயதிலிருந்து 49 வயது, 50 வயதிலிருந்து 64 வயது ஆகியன அந்தப் பிரிவுகள். ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 70 விழுக்காட்டினர் திருமணம் தேவையற்றது என்று தெரிவித்தனர். நடுத்தர வயது பிரிவைச் சேர்ந்தவர்களில் 58 விழுக்காட்டினரும் 50 வயதிலிருந்து 64 வயது வரையிலானோருக்கான பிரிவைச் சேர்ந்தவர்களில் 50 விழுக்காட்டினரும் இதே கருத்தை முன்வைத்தனர்.

திருமண பந்தத்தில் இணைந்தாலும் குழந்தைகள் பெற்றெடுக்கத் தேவையில்லை என்று ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 72 விழுக்காட்டினர் தெரிவித்தனர். நடுத்தர வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களில் 63 விழுக்காட்டினரும் 50 வயதிலிருந்து 64 வயது வரையிலானோருக்கான பிரிவைச் சேர்ந்தவர்களில் 49 விழுக்காட்டினரும் இதையே கூறினர்.

இருப்பினும், திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஆய்வில் பங்கெடுத்த இளையர்களில் 68 விழுக்காட்டினர் கூறினர். குழந்தைச் செல்வம் பெற விரும்புவதாக 67 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

காதலிக்காததற்கும் திருமணம் செய்துகொள்ளாததற்கும் ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பலர் (மூன்று பிரிவுகளும்) காரணங்களை முன்வைத்தனர். தமக்குப் பிடித்தமான, பொருத்தமான ஒருவரை இன்னும் சந்திக்கவில்லை அல்லது திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ விரும்புவதே ஆக அதிகமாகக் கூறப்பட்ட காரணங்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here