நாட்டில் 43,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புகைப்பிடிப்பவர்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்

சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்கள் இணைந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால புகைபிடித்தல் கண்டறிதல் திட்டமான Kotak இன் கீழ் பரிசோதிக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 1.3 மில்லியனில் 43,019 மாணவர்களும், இரண்டு மில்லியனில் தொடக்கப் பள்ளி மாணவர்களில் 341 மாணவர்களும் நேர்மறை பதிலை பெற்றுள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் இருந்து பிள்ளைகள் இந்த பழக்கத்தை பழகுவார்கள் மற்றும் சிலர் தங்கள் சகாக்களால் புகைபிடிப்பதை ஊக்குவிக்கும்போதோ அல்லது அறிமுகப்படுத்தும்போதோ, அதன் பின் வழக்கமாக புகைப்பிடிப்பவர்களாக மாறிவிடுவார்கள் என்று, மலேசிய புகையிலை கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர், முஹமட் ஷானி அப்துல்லா தெரிவித்தார்.

பள்ளிக் குழந்தைகள் புகைப்பிடிப்பதைத் தடுக்க, அவர்களின் வீடுகள் மற்றும் அனைத்து பொது இடங்களையும் புகையிலை இல்லாத சூழலாக மாற்ற வேண்டும் என்பது சமூகத்தின் பெரும் சவாலாக இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய புற்றுநோய் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் முரளிதரன் முனிசாமி கூறுகையில், பிள்ளைகளிடையே இந்த புகைத்தலை கட்டுப்படுத்த பல முனைகளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், முதல் படி கடுமையான சட்டக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது, இதனால் பிள்ளைகள் சிகரெட்டுகள் மற்றும் வேப்களை அணுகுவது தடை செய்யப்பட வேண்டும்.

“இரண்டாவது சமூகக் கல்வி மற்றும் புகைபிடித்தல் சாதாரணமானது அல்ல, அதைக் கேவலமாகப் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூகத்தின் மத்தியில் வரவேண்டும். அப்போதுதான் குழந்தைகள் புகைபிடிப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள், ஏனெனில் அது கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டப்பூர்வமாக இது தடைசெய்யப்பட்டது என்பதும் அவர்களை தடுக்கும்.”

புகைபிடிக்கும் பள்ளிக்குழந்தைகள் 30 மற்றும் 40 வயதை அடையும் போது 15 விதமான புற்றுநோய்களுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக கூறிய டாக்டர் முரளிதரன், அவர்கள் வயதாகும்போது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here