சான்டியாகோ:
சிலியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் கேப்ரியல் பொரிச் தெரிவித்துள்ளார்.
இர்ருப்ணபினும் மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
சிலியின் வால்பராய்சோ பகுதியில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
தீயணைப்புப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வால்பராய்சோ பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடலோர நகரமான வினா டெல் மார், காட்டுத் தீயில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய மீட்பு பணியினர் சிரமப்படுவதாக சிலி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயில் கருகி 40 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் ஆறு பேர் தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாண்டதாகவும் அதிபர் பொரிச் தெரவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே சிலியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீ என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.
சிலியில் ஒரே நேரத்தில் 92 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக 43,000க்கும் அதிகமான ஹெக்டர் பரப்பளவு நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலியின் உள்துறை அமைச்சர் கெரோலினா டொஹா கூறினார்.
பிப்ரவரி 2ஆம் தேதிக்கும் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.