வெளிநாட்டு ஊழியர்களைக் கண்ணியமாக நடத்துங்கள்: அறிவுறுத்திய நீதிமன்றம்

கோலாலம்பூர்:

வெளிநாட்டு ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்தும்படி நிறுவனங்களுக்கு மலேசியத் தொழில்துறை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வேலையிடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை உடலளவில் துன்புறுத்துவதும் அவர்கள் மீதான அடக்குமுறைகளையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும், அவர்கள் எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளம் ஈட்டுபவர்களாக இருந்தாலும், மனிதத்தன்மையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டிய உரிமை பெற்றுள்ளனர் என்பதை நிறுவனங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்,” என்று தொழிலக நீதிமன்ற தலைவர் ஆண்டர்சன் ஓங் வலியுறுத்தினார்.

‘பிடபிள்யூபி’ என்ற நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய எஸ். பால் பெஞ்சமின், தம்மைப் பணியிலிருந்து நீக்கியது நியாயமற்றது எனக் கூறி, தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்துரைத்தது.

அந்நிறுவனத்தில் துப்புரவாளராகப் பணியாற்றிய ரகுமான் முகமட் மஹ்பூபர் என்பவரை பெஞ்சமின் வேலையிடத்தில் அடித்ததாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிறுவன உள்விசாரணையை அடுத்து, பெஞ்சமின் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதனை எதிர்த்து பெஞ்சமின் தொழிலக நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த 20 பக்கத் தீர்ப்பில், “சட்ட நடைமுறை கோரவும் சட்டப்படி பாதுகாப்பு பெறவும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உரிமையுண்டு. ரகுமான் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாக, அதுபற்றி நிறுவனத்திடம் பெஞ்சமின் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்,” என்று ஓங் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here