செனாய் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஓடும் லோரியின் பின்புறத்தில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். முகநூல் பதிவில் நேற்று (பிப்ரவரி 16) நண்பகல் வெளியான ஒரு வீடியோ, வைரலானதை தொடர்ந்து போலீசார் அந்நபரை தேடி வருவதாக கூலாய் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் டான் செங் லீ கூறினார்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 15) காலை 10 மணியளவில் KM35 இரண்டாவது-இணைப்பு விரைவுச் சாலையில் செனாய் நோக்கிய சாலையில் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தின் போது, தான் ஓட்டிச் சென்ற லோரியின் பின்புறத்தில் ஒருவர் நின்று கொண்டிருப்பதை குறித்த லோரி ஓட்டுநர் கவனிக்கவில்லை என்றும், மேலும் அவரது நண்பர் அதுதொடர்பான வைரலான வீடியோவை அவரிடம் காட்டிய பின்னரே அவருக்கு சம்பவம் பற்றி தெரியும் என்றும் அவர் இன்று ( பிப்ரவரி 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
36 வயதான குறித்த லோரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவ கூலாய் மாவட்ட போலீசாரிடம் முன்வந்து ஒத்துழைப்பு வழங்கியதாக டான் மேலும் தெரிவித்தார். சட்ட விரோதமாக ஓடும் வாகனத்தை ஓட்டி, ஓட்டுநருக்கு இடையூறு விளைவித்ததாக 47(1) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.