கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டதை அடுத்து ஆட்ட அதிகாரி குறித்துப் பேசியதற்காக ஷேப்பீல்ட் யுனைடெட் அணி நிர்வாகி கிரிஸ் வில்டருக்கு மலேசிய ரிங்கிட் மதிப்பின்படி 69 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆட்டத்தில் ஷெப்பீல்ட் யுனைடெட் அணி 3-2 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டது. இந்நிலையில் ஆட்ட அதிகாரி முடிவெடுப்பதில் முழு கவனம் செலுத்தவில்லை என அவர் கூறினார்.
அதிலும் ஆட்டம் முடிவுற்ற பிறகு நடுவர் டோனி ஹெரிங்டனுடன் தாம் பேச முற்பட்டபோது உதவி நடுவர் சான்விட்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தனக்கு மதிப்பளிக்காததுபோல் இருந்ததாகவும் வில்டர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வில்டர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சுயேச்சை மேலாண்மை ஆணையம் இத்தண்டனையை விதித்தது என்று இங்கிலாந்து கால்பந்துச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது ஷேப்பீல்ட் யுனைடெட் அணி பிரிமியர் லீக் பட்டியலில் 13 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இத்தவணையில் 25 ஆட்டங்களில் களம் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









