ஆமைகளை கடத்த முயன்ற ஆடவர் கைது

கோலாலம்பூர்:

பெட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை உடையக்கூடிய நகைகள் என அறிவித்து, ‘100 ஆண்டுகள் பழமையான’ ஆமைகளை கடத்த முயன்ற உள்நாட்டவர் ஒருவரின் செயல் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் அமைப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அம்பலமானது.

வட ஆபிரிக்காவில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) ஊடாக மூன்று சுல்காட்டா வகை ஆமைகளை அவர் கடத்தியதாக மலேசிய வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் (பெர்ஹிலித்தான்) துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு KLIA க்கு வந்த சரக்கில் சந்தேகம் கொண்டு பெர்ஹிலித்தான் அதிகாரி சே வான் சுல்கிப்லி சே வான் யூசோப் தலைமையிலான குழு, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் விளைவாக இந்த கடத்தல் முயற்சி வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“அதைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக KLIA போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 [சட்டம் 716] மற்றும் அழிந்துவரும் உயிரினங்களுக்கான அனைத்துலக வர்த்தகச் சட்டம் 2008 [சட்டம் 686] ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும், “வழக்கில் உள்ள அனைத்து சான்றுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக KLIA பாதுகாப்பு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன,” என்று அவர் கூறினார்.

தகவல்களின் அடிப்படையில், சுல்காட்டா ஆமை உலகின் மூன்றாவது பெரிய ஆமை ஆகும். இந்த விலங்கு ஆப்பிரிக்காவின் பாலைவனத்திலிருந்து வருகிறது மற்றும் 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here