சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

ஹாங்காங்:

பிறந்திருக்கும் கடல்நாக ஆண்டில் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து உள்ளதாக ‘யிக்காய்’ எனப்படும் நிதிச் செய்தி நிலையம் தெரிவித்து உள்ளது.

குழந்தை பிறப்பது தொடர்ந்து அதிகரித்தால், ஏற்கெனவே வீழ்ச்சி அடைந்து வரும் மக்கள்தொகை எண்ணிக்கையை இவ்வாண்டு உயர்த்த அது கைகொடுக்கும் என்றும் மக்கள்தொகை தொடர்பான கொள்கைகளை வகுப்போருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றும் அச்செய்தி நிலையம் குறிப்பிட்டு உள்ளது.

சீனர்களின் சோதிடக் கணிப்புப்படி கடல்நாக ஆண்டு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது.

இம்மாதம் (பிப்ரவரி) 10ஆம் தேதி கடல்நாகப் புத்தாண்டு பிறந்தது முதல் குழந்தை பிறப்பு ‘கணிசமாக’ அதிகரித்திருப்பதை மருத்துவமனைகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ‘யிக்காய்’ கூறியது.

எடுத்துக்காட்டாக, கிழக்கு சீனாவில் உள்ள ஊக்ஸி மருத்துவமனையை அது குறிப்பிட்டது.

புத்தாண்டு பிறந்த பின்னர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு அந்த மருத்துவமனையில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதேபோல, வடமேற்கு ஷான்ஸி மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு 72 விழுக்காடு அதிகரித்திருப்பதையும் அந்தச் செய்தி எடுத்துக்காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here