கோலாலம்பூர்:
மலேசியாவுக்குள் வருவோர் பயன்படுத்தும் நுழைவாயில்களின் பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையை எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்தம்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து விவரித்த அவர், நாட்டின் அனைத்து நுழைவாயில்களும் துடிப்புடன் செயல்படவும் தாவாவ், சாபா, பினாங்கு போன்ற விமான நிலையங்களில் காணப்படும் மக்கள் நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய ரயில் சேவை வசதியும் வேகமாக முடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
“கோத்தா கினாபாலு, கூச்சிங், பினாங்கு, அலோர் ஸ்டார், கோத்தா பாரு விமான நிலையங்களைப் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை, தாவாவ் விமான நிலையத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
“தாவாவ் விமான நிலையம் சிறியது என்று நம் எல்லோருக்கும் தெரியும். அது வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கும் வகையில் கட்டப்படவில்லை. மலேசியா வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை வரவேற்க வேண்டும். அதனால், விமான நிலைய பராமரிப்புப் பணிகள் மூன்று, நான்கு ஆண்டுகள் வரை எடுக்கக்கூடாது,” என்று இன்று (பிப்ரவரி 24) கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய வர்த்தக, தொழில் திறன் காட்சி நிகழ்வில் உரையாற்றும்போது கூறினார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்த அந்தப்பகுதிகளில் உள்ள அதிகாரிகள், நிதி, போக்குவரத்து அமைச்சுகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று விளக்கினார்.
எனினும், சீரரமைப்புப் பணிகள் அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் பிரதமர் நினைவுபடுத்தினார்.