இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் வழங்கும் விழா: 50,000 ரிங்கிட்டை சிவகுமார் வழங்கினார்

நாம் நம் தாய்மொழியுடன் இணைந்து நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் எண்ணமாகவும் இருக்கிறது. நம் சமயத்தை வளர்க்க வாசிப்பு பழக்கம் மிக முக்கியம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தமதுரையில் தெரிவித்தார். நம் நாட்டில் தாய்மொழியை வளர்க்க நம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கருத்தரங்கமும் இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் வழங்கும் விழா இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. உடல் நல குறைவினால்  இந்த பெருவிழாவிற்கு வரவில்லை என்றாலும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் 50,000 ரிங்கிட்டை வழங்கியிருப்பது தாய்மொழி மீதான அவரின் பற்றை புலப்படுத்துகிறது என்றார்.

திருபீடத்தின் இந்துக் கலைக்களஞ்சிய தொகுப்பின் ஞானப்பேழைகளை பெறுவதற்காக விண்ணப்பித்து அருமையுடன் தங்களது நூலகங்களில் அமைத்து கொள்ளும் சிறப்பினைப் பெற்ற திருக்கோவில்கள், பள்ளிகள் மற்றும் சமய இயக்கங்களின் பொறுப்பாளர்களிடம், உலக வரலாற்றுப் பதிவாக 4200 பக்கத்தில் பெருஞ்செலவில் ஆன்மீக இலட்ச்யத்தோடும் தமிழ் இலக்கியப் பெருமையோடு இந்த மங்கல தொகுப்பினை இலவசமாக தங்களது உபயமாக வழங்குவதற்கு உதவிய அனைத்து நல்லுளங்களுக்கும் இவ்வேளையில் நன்றியினை தெரிவித்து கொள்வதாக தவத்திரு பாலயோகி சுவாமிகள் தமது அருட்தலைமை உரையில் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றிய ஆஸ்திரேலிய நாட்டின் சட்டத்துறை அறிஞரான சந்திரிகா சுப்பிரமணியம் தமதுரையில் ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பள்ளிகளோ அல்லது தமிழ் சங்கங்களோ இல்லை. ஆனாலும் எங்கள் நாட்டில் நாங்கள் தமிழ் மொழியை வளர்க்க பல வழிகளில் பாடுபட்டு வருகிறோம். அந்த வகையில் மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளும் பல தமிழ் சங்கங்களும் இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாம் நம் தாய்மொழியை வளர்ப்போம் என்றார் அவர்.

இந்த பெருவிழாவில் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், டான்ஶ்ரீ க.குமரன், டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், பேராசிரியர் முனைவர் திலகவதி, டத்தோ டாக்டர் கதிரேசன், முனைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் ஆன்றோர் சான்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here