கிலோ கணக்கில் தங்கம் திருடிய குற்றச்சாட்டில் நடிகை கைது

தோழி என்று சொல்லி நட்பு வளர்த்து, பழகிய வீட்டிலேயே கிலோ கணக்கில் நகைத்திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரும், நடிகையுமான செளமியா ஷெட்டி.

இதனைக் கண்டறிந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னுடைய பிரபல்யத்தைக் காத்துக் கொள்வதற்காகவும் பணத்தாசையிலும் நகைகளைத் திருடும் வரை சென்றிருக்கிறார் நடிகை செளமியா ஷெட்டி.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள், ரீல்ஸ் போட்டு இணையத்தில் பிரபலமானவர். இந்த பிரபல்யத்தை வைத்தே தெலுங்கில் ‘டிரிப்’ என்றப் படத்தில் நடித்திருக்கும் செளமியா ஷெட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் திருட்டு வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில், பாலாஜி மெட்ரோ ரெசிடென்சி பிளாட் எண் 102ல் ஜனபால் பிரசாத்பாபு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி 1 கிலோ 750 கிராம் தங்க நகைகள் திருடு போயிருப்பதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்தப் புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜனபால் பிரசாத் பாபு வசித்து வரும் குடியிருப்பில் சிசிடிவி கேமரா மற்றும் திருடு போன பீரோவில் கைரேகை உள்ளிட்ட விஷயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், ஜனபாலிடம் நடத்திய விசாரணையையடுத்து சந்தேகம் வலுத்த மூன்று பேரை கட்டம் கட்டியிருக்கின்றனர் காவல்துறையினர். அதில் நடிகை செளமியாவும் ஒருவர்.

ஜனபாலின் மகள் மெளனிகாவுடன் கடந்த எட்டு வருடங்களாக பழகி வந்திருக்கிறார் நடிகை செளமியா. இந்த நட்பை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றவர், ஒவ்வொரு முறையும் சந்தேகம் வராதபடிக்கு சிறுக சிறுக நகைத்திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

வீட்டுக்கு வந்து செல்லும் போதெல்லாம் மெளனிகாவின் அறையை குளிப்பதற்காகப் பயன்படுத்தும் செளமியா அந்தத் தருணத்தை தனது நகைத்திருட்டிற்கு பயன்படுத்தியுள்ளார்.

இப்படி சுமார் ஒரு கிலோ தங்கம் வரை திருடியிருக்கிறார் செளமியா. உறவினர்கள் திருமணத்திற்காக செல்ல நகைகளை அணிவதற்காக பீரோவைத் திறந்து பார்த்த போது தான், நகைகள் திருடு போன விஷயம் ஜனபால் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகார் கொடுத்திருக்கின்றனர். விசாரணையில் செளமியா தான் குற்றவாளி என்பதை உறுதி செய்த போலீஸார் அவரை கோவாவில் கைது செய்து அவரிடம் இருந்து 74 கிராம் தங்கத்தை மீட்டுள்ளனர்.

மீதமுள்ள நகைகளை அவர் எங்கு வைத்திருக்கிறார், என்ன செய்தார் என்று தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here