எம். அன்பா
காஜாங், மார்ச் 5-
தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பக்கலை விளையாட்டுத்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நோக்கில் மார்ச் 3ஆம் தேதி ஜாலான் ரெக்கோ சிலம்பம் கிளப் ஏற்பாட்டில் தமிழன் வீர தற்காப்புக் கலை சிலம்பம் பட்டயத் தேர்வு நிகழ்ச்சி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
பயிற்றுநர்கள் உள்ளிட்ட மாணவர்களின் திறன்மிக்க செயல்பாட்டை வலுவடையச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதன் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் கிளப் தலைமை பயிற்றுநர் விஜயசேகரன் சிவராஜ் தெரிவித்தார். சிலம்பக் கலை போன்ற தற்காப்பு கலைகளைத் தொடர்ந்து நாம் பாதுகாப்பதோடும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் என காஜாங் நகராண்மைக்கழக உறுப்பினர் ரெமன் குவான் குறிப்பிட்டார். சுங்கை சுவா சமூக நல மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
இந்திய கலை கலாச்சாரத்தை மேலோங்க செய்யும் வகையில் பண்டைக்காலம் முதல் நமது தற்காப்புக் கலையில் முன்னோடியாக திகழ்கின்றோம் என்று மாஸ்டர் டத்தோ சிவகுமார் மகாகுரு ஆறுமுகம் தமது சிறப்புரையில் கூறினார்.
இத்தேர்வு நிகழ்ச்சியில் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், ஊதா, சாக்லேட் ஆகிய வண்ணங்கள் கொண்ட சிலம்பப் பட்டயங்களை 30 மாணவர்களுக்கு மாஸ்டர் சிவா வழங்கினார். இந்த பயன்மிக்க நிகழ்ச்சி வெற்றியடைய உதவி நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிளப் தலைவர் பிரேமானந்தன் கருணாநிதி, துணைத் தலைவர் விஜேந்திரன் தேவராஜு, சக உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.









