கோலாலம்பூர், ஏப்ரல் 2:
பத்துமலை, தாமான் செலாயாங் பெர்மாத்தா பகுதியில் இயங்கி வந்த தனியார் சிறுவர் இல்லம் ஒன்றில், கடந்த பத்து ஆண்டுகளாகச் சிறுவர்கள் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக 31 வயது இல்ல உரிமையாளர் மற்றும் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் 18 வயதை எட்டிய முன்னாள் வசிப்பாளர்கள் இருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ரகசிய ஆய்வின் மூலம் இக்கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
சுமார் 36 சிறுவர், சிறுமியர் தங்கியிருந்த இந்த இல்லம், சமூக நலத்துறையில் (JKM) முறையாகப் பதிவு செய்யப்படாமல், ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கோம்பாக் போலீஸார் 10-க்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















