நம் நாட்டில் தமிழ் மற்றும் இலக்கியப் பாடத்தை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிலும் பள்ளியாக கிள்ளான் இராஜா மகாடி தேசிய இடைநிலைப்பள்ளி திகழ்ந்து வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பள்ளியில் மற்றொரு வரலாற்றுப்பூர்வமான, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய மாற்றமொன்று இவ்வருடப் பள்ளி தவணையில் நிகழ்ந்துள்ளது.


படிவம் 4,5 மாணவர்களின் தமிழ் மற்றும் இலக்கியப் பாடங்கள் பாட அட்டவணையிலேயே போதிப்பதற்கு இப்பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இவ்விரு பாடங்களையும் பாட அட்டவணையில் இணைக்க வேண்டும் என்ற நீண்டதொரு போராட்டத்திற்கு விடிவெள்ளியாய் இம்மாற்றம் அமைந்துள்ளது என இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ தீபாகரன் கருப்பையா அவர்கள் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது இப்பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதன் வாயிலாக மேலும் அதிகமான மாணவர்கள் அவ்விரு பாடங்களையும் எஸ்.பி.எம் தேர்வுக்கு எடுக்கக்கூடிய வாய்ப்பும் கிட்டியுள்ளது.


இதுகால்வரை மாணவர்கள் எதிர்நோக்கிய போக்குவரத்துச் சிக்கலுக்கும் தீர்வு பிறந்துள்ளது. இவ்வேளையில் இத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்தினருக்கு டத்தோ தீபாகரன் கருப்பையா அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொண்டார். மேலும், தமிழ் மற்றும் இலக்கியப்பாடங்கள் இப்பள்ளியில் தழைத்தோங்குவதற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு தமிழ்ப்பணியாற்றும் தமிழாசிரியர்களுக்கும் தமது உளமார்ந்த பாராட்டினையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.