பத்து பஹாட், தஞ்சோங் லாபுக்கு அருகே ஜாலான் ஜோகூர் பாரு- மலாக்கா 103ஆவது கிலோ மீட்டரில் கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை (மார்ச் 15) இரவு சுமார் 11.40 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக பத்து பஹாட் காவல்துறைத்தலைவர் உதவி ஆணையர் Ismail Dollah தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ரெங்கிட்டில் இருந்து பத்து பஹாட் நோக்கி வந்து கொண்டிருந்த சின் சியோ மெய் 43 என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஓட்டிச் சென்ற கார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, முகமது ஆரிப் அஸீம் அகமது (வயது 22) என்பவர் ஓட்டிச் சென்ற மற்றொரு கார், எதிர் திசையில் இருந்து வந்து, அவரது பாதையில் நுழைந்து, இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது என்று அவர் சனிக்கிழமை (மார்ச் 16) கூறினார்.
இந்த மோதலில் இரு சாரதிகளும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஏசிபி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார். சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சாட்சிகள் முன் வந்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.









