இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கவலையளிக்கிறது: அமெரிக்கா கருத்து

ந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, கவலை அளிப்பதாகவும், கவனமாக அதனைக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது கவலை அளிப்பதாகவும் அது எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”இந்தியாவில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளா குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது. அமெரிக்கா தொடர்ந்து இந்த சட்டம் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கண்காணித்து வருகிறது. மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக, கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவிற்கு வருகை தந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இஸ்லாமியர்கள் நீங்கலாக, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த சட்டத்தின் மூலமாக குடியுரிமை பெறுவார்கள். இருப்பினும் இதில் இஸ்லாமியர்கள் இணைக்கப்படாததே நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான காரணமாக இருந்தது. இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, ஏற்கெனவே குடியுரிமை பெற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் இச்சட்டம் ஏற்படுத்தாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here