சென்னை உட்பட முக்கிய நகரங்களில் விடிய விடிய போலீஸ் சோதனை; ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை:

மிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டது.

இதன்போது லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து முதற்கட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் படங்கள் மற்றும் அரசின் சாதனை விளக்க படங்களை ஊழியர்கள் அகற்றினர்.

மேலும், அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்த முதல்வர், அமைச்சர்களின் படங்கள் அகற்றப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பொதுமக்கள் ரூ50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு எச்சரித்துள்ளார்.

முறைகேடான பணப் பரிமாற்றங்களைத் தடுக்க ஏதுவாக வருமான வரித்துறை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டை அறையைத் திறந்துள்ளது. தமிழக முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என அறிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ரூ.2 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி வெளியே கொண்டு செல்லப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் பாதுகாப்புக்காக 25 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர் என்றும் மற்றவர்கள் இனி படிப்படியாக வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

குளித்தலையில் ரூ.5.83 லட்சம் பறிமுதல்

கரூர் மாவட்டத்தின் குளித்தலை அருகே மருதூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட கிட்டத்தட்ட ரூ.6 லட்சத்தை காவல்துறை பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

மருதூர் வழியாக வந்த தஞ்சையைச் சேர்ந்த கலைவாணன் என்பவரின் காரை சோதனை செய்தனர். அப்போது. அதில் உரிய ஆவணங்கள் இன்றி 4,80,000 ரூபாய் ரொக்கமாக கொண்டுவரப்பட்டது தெரியவந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.

இன்னொரு சம்பவத்தில் மணப்பாறையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் காரை சோதனையிட்டனர். அப்போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1,03,500 பணத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here